இனநல்லிணக்கத்தை ஏற்படுத்துமா கண்டிய நடனம்?
இளந்திரையன்
ஆயிரம் பூக்கள் பகுதி வாசகர்களும் பங்குகொண்டு விவாதிக்கக்கூடிய ஒரு களம். இங்கு முன்வைக்கப்படும் கருத்துகளுக்கான எதிர்வினைகளுக்கும் மாற்றுக் கருத்துகளுக்கும் இடமளிக்க பொங்குதமிழ் தயாராகவே உள்ளது.
முன்வைக்கப்படும் கருத்துகள் விவாதங்களோடு தொடர்பானதாகவும் ஊடக அறம் சார்ந்ததாகவும் இருத்தல் வேண்டும். கட்டுரைகளை சுருக்கவும் தவிர்க்கவும் ஆசிரியருக்கு உரிமையுண்டு
இலங்கையின் வடபகுதியில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் நுண்கலை நிலையத்தில் தமிழ் மாணவர்களுக்கு சிங்கள நடனங்கள் பயிற்றுவிக்கப்பட்டு வருவதாக பொங்குதமிழ் செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்குடன் தமிழ் மாணவர்களுக்கு கண்டிய நடனம் பயிற்றுவிக்கப்பட்டு வருவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருந்ததாக இச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இச் செய்தியைப் போன்று கடந்த மாதமும் தமிழர் தாயகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வு எனது கவனத்தை ஈர்த்திருந்தது. வெசாக் பண்டிகையை முன்னிட்டு சிறிலங்கா படைத்தரப்பினர் வடபகுதியில் மேற்கொண்டிருந்த நிகழ்வுகளே அதுவாகும்.
வடபகுதியின் பல்வேறு பிரதேசங்களிலும் வெசாக் பண்டிகையை சிறிலங்கா படைத்தரப்பினர் பெருமெடுப்போடு நடத்தியிருந்தனர்.
இப் பண்டிகையை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் துரையப்பா விளையாட்டரங்கு, பொது நூலகம், சுப்பிரமணியம் பூங்காவை அண்மித்த பகுதி, மணிக்கூட்டுக் கோபுரம், பண்ணையடி போன்ற பிரதேசங்கள் முற்றிலுமாக அலங்கார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்ததை இலங்கையிலிருந்து ஒளிபரப்பாகும் தமிழ் தொலைக்காட்சி செய்தியாக காண்பித்திருந்தது.
யாழ்ப்பாண மக்கள் மட்டுமன்றி தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்கள மக்களும் இம்முறை யாழ்ப்பாணத்தில் வெசாக் பண்டிகைத் தினத்தைக் கொண்டாட வருகை தந்திருப்பதாகவும், அங்கு சிங்களவர்களும், தமிழர்களும், முஸ்லிம்களும் எந்தவித அச்சமின்றி இந்த வெசாக் அலங்காரங்களைக் கண்டு மகிழ்வதைக் காண முடிவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கோடு நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இந் நிகழ்வில் சிறிலங்காப் படையினர் பொது மக்களுக்கு குளிர்பானங்கள், இனிப்புப் பண்டங்கள் மற்றும் உணவுப் பொதிகளை வழங்கி இருந்ததையும் அத் தொலைக்காட்சி காட்சிகளாக காண்பித்திருந்தது.
ஆனால் இங்கு எழுகின்ற முக்கியமான கேள்வி இத்ததைய கண்டி நடனங்களும் வெசாக் பண்டிகைகளும் இனங்களுக்கிடையேயான நல்லிணக்கத்தை ஏற்படுத்திவிடும் என்ற நம்பிக்கை உண்மையில் இதனை ஏற்பாடு செய்பவர்களிடம் காணப்படுகிறதா என்பதே.
கடந்த அரைநூற்றாண்டுக்கு மேலாக ஆழ வேருன்றி 2 இலட்சத்திற்கும் அதிகமாக உயிர்களைப் பலிவாங்கி நிற்கும் இனப்பிரச்சினையின் உண்மையான காரணங்களைக் கண்டறிந்து அவற்றிற்கான தீர்வுகளை முன்வைக்காதவரை இனங்களுக்கிடையேயான நல்லிணக்கம் என்பது வெறும் கனவாகவே அமைந்துவிடும்.
இலங்கையில் 30 வருடங்களாக போர் நடைபெற்றதற்கான காரணங்களை சிறிலங்கா அரசும், சிங்கள மக்களும் உண்மையான அர்த்தத்தில் விளங்கிக் கொள்ளாத வரையிலும், இத்தகைய நடவடிக்கைகள் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு எத்தகைய பங்களிப்பையும் வழங்கப் போவதில்லை என்பதே உண்மை.
இரு இனங்களுக்கும் இடையிலான நட்புறவையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கான முன்முயற்சிகளை எடுக்க வேண்டிய பெரும் பொறுப்பு சிங்கள அதிகார மட்டங்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. அரசியல் ரீதியாக எடுக்கப்படும் இனப்பிரச்சனைக்கான தீர்வு முயற்சிகளே நீண்டகால அடிப்படையில் நல்லிணக்கத்திற்கு வழிகோலும்.
ஆனால் இலங்கையில் என்ன நடக்கிறது?
போர் முடிவுக்கு வந்து ஒரு வருடமாகியும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் இயல்பு வாழ்வுக்குத் தேவையான அடிப்படைகள் எதுவும் சிறிலங்கா அரசால் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை.
போரின் போது இடம்பெயர்ந்து மீள்குடியேறிய மக்கள் வீடின்றி, வாழ்வாதாரம் இன்றி பெரும் சிரமங்களை நாளாந்தம் எதிர்நோக்கி வருகின்றனர். இதனை விட, சுமார் 70,000 மக்கள் இன்னும் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
மாறாக, அபிவிருத்தி என்ற பெயரிலும், பயங்கரவாதம் எனும் பெயரிலும் தமிழ் மக்களை மேலும் புண்படுத்தும் காரியங்களையே சிறிலங்கா அரசு மேற்கொண்டு வருகின்றது.
வடபகுதி மத மற்றும் கலாசார ரீதியாக சிங்கள, பௌத்த மயமாக்கப்பட்டு வருகின்றது. வடபகுதி அரசியல், சமூக, கலாசார மற்றும் பொருளாதார ரீதியாக இலங்கையின் பெரும்பான்மைச் சமூகத்தினரால் விழுங்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இன்னொரு புறத்தில் யாழ்ப்பாணம் சிங்கள பௌத்தர்களுக்கே சொந்தமானது என நிறுவுகின்ற முயற்சிகளில் சிறிலங்கா அரசு இறங்கியுள்ளது. யாழ் கந்தரோடைப் பகுதியில் இதற்கான புதைபொருள் ஆராய்ச்சியில் ஈடுபட சிறிலங்காவின் புதைபொருள் ஆராய்ச்சித் திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கின்ற செய்திகள் தெரிவிக்கின்றன.
இவைகளை விட வடபகுதி வீதிகளின் பெயர் மற்றும் குறியீட்டுப் பலகைகள் சிங்கள மொழியில் மாற்றப்பட்டிருக்கின்றன. வடபகுதியின் முக்கியமான பகுதிகளில் பௌத்த விகாரைகள், போர் வெற்றியை நினைவுகூரும் தூபிகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
மறுபுறத்தில், போரில் உயிரிழந்த தமது அன்புக்குரியவர்களை நினைவு கூருவதற்கும், அவர்கள் குறித்த பிரார்த்தனை நிகழ்வுகளிலும் கலந்து கொள்வதற்கு தமிழ் மக்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் துயிலும் இல்லங்கள், நினைவுத் தூபிகள் அனைத்தும் சிறிலங்கா படைத்தரப்பால் அழிக்கப்பட்டுள்ளதுடன், வடபகுதியில் சிறிலங்கா படைத்தரப்பால் பாரிய படைமுகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
ஏ 9 நெடுஞ்சாலையின் இரு புறத்திலும் சிறிலங்கா படைத்தரப்பினரால் நடத்தப்படும் உணவு விடுதிகளே இருக்கின்றன. இந்த உணவு விடுதிகளை சிறிலங்கா படைத்தரப்பின் ஒவ்வொரு படைப்பிரிவுகளும் நடத்தி வருவதாக சர்வதேச ஊடகம் ஒன்றில் இடம்பெற்றிருந்த செய்திக் கட்டுரை ஒன்றில் அண்மையில் படிக்கக் கிடைத்தது.
அக் கட்டுரையில், ஐஸ்கிறீம் விற்கும் வயது முதிர்ந்த தமிழர் ஒருவர் போரில் அனைத்தையும் இழந்த தங்களால் ஆரம்பத்தில் இருந்துதான் வியாபாரத்தை ஆரம்பிக்க முடியும் எனக் குறிப்பிட்டதாகவும், தமக்கான வாய்ப்புக்கள் அரிதாகவே உள்ளதாக அவர் ஆதங்கப்பட்டதாகவும் கட்டுரையாளர் குறிப்பிடுகின்றார்.
இத்தகைய நடவடிக்கைகளில் சிறிலங்காப் படைத்தரப்பினர் தன்முனைப்போடு ஈடுபடுவதாக கருதமுடியாது. சிறிலங்கா அரசின் உயர்மட்ட உத்தரவு மற்றும் கட்டளைகளின் பிரகாரமே அவர்கள் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
இது சிங்கள் பௌத்த மேலாதிக்கவாதத்தை வடபகுதியில் நிலை நிறுத்துவதற்கான சிறிலங்கா அரசின் ஒரு கொள்கையாகவே நோக்கப்பட வேண்டும்.
இவைகளை விட, சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள், முன்னாள் போராளிகள் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றமை மற்றும் தேசிய நல்லிணக்கம் தொடர்பில் சர்வதேச சமூகத்தால் சுட்டிக்காட்டப்பட்டுவரும் விவகாரங்களுக்கு பதில் சொல்லும் கடமைப்பாட்டில் இருந்து சிறிலங்கா அரசு தப்பித்தே வருகின்றது.
இந் நிலையில், கடந்த 18ஆம் திகதி போரில் உயிரிழந்த படையினரை நினைவு கூரும் வகையில் பெருமெடுப்பிலான வெற்றி விழாவை சிறிலங்கா அரசு கொண்டாடியிருக்கின்றது.
இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வன்னிப் போரில் படையினர் பொது மக்கள் ஒருவரையும் கொல்லவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
தமது படையினர் ஒரு கையில் துப்பாக்கியையும், மறு கையில் மனிதவுரிமைகள் சாசனத்தையும் கையில் ஏந்திய படியே போரில் ஈடுபட்டதாக அவர் தனதுரையில் புதுவிளக்கம் அளித்துள்ளார்.
சிறிலங்கா அரசின் இத்தகைய போக்குகளும், மனப்பாங்கும் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளாக அமையவில்லை.
மாறாக, தமிழர் தாயகத்தை சிங்கள பௌத்த பூமியாக மாற்றுவதற்குரிய நடவடிக்கைகளையே சிறிலங்கா அரசு மேற்கொண்டு வருகின்றது.
சிறிலங்கா அரசின் இத்தயை நடவடிக்கைகள் தமிழ் மக்கள் மத்தியில் அச்ச உணர்வையே தோற்றுவிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
கடந்த பல பத்தாண்டுகளாக தமிழ் மக்களின் கல்வி மற்றும் பொருளாதார வளத்தை தொடர்ந்து ஆட்சி செய்து வந்த சிறிலங்கா அரசுகள் சிதைத்துச் சீரழித்துள்ளனர்.
இந் நிலையில், யாழ் குடாநாட்டில் அமைதி நிலவுவதாகவும், அங்கு மக்கள் அச்சமின்றி வாழ்ந்து வருவதாகவும் தென்னிலங்கை ஊடகங்கள் சில செய்திகளை வெளியிடுகின்றன.
அமைதி என்பது சமாதானம் அல்ல. போர் என்பது உண்மையான அர்த்தபுஸ்டியுடன் கூடிய சமாதான முயற்சிகளாலேயே வெற்றி கொள்ளப்படுகின்றது. அதுவரை இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகளை வெற்றி கொள்ள முடியாது.
கலையும், கலாசாரமும் மக்களுக்கு உரியவை. அதனை எவராலும் திணிக்க முடியாது. அவ்வாறு அவை திணிக்கப்படுகின்ற பட்சத்தில் அது இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகளை மேலும் வளர்த்து இன்னொரு போருக்கே வழிவகுக்கும்.
சிங்கள நடனத்தைக் கற்றுக் கொள்வதன்மூலம் இனநல்லிணக்கத்தை ஏற்படுத்தலாம் என்ற திருமறைக் கலாமன்றத்தின் யோசனைகள் நீண்ட காலமாக போராடிய ஒரு சமூகத்திலிருந்து எழுவது அபத்தமானது. இனப்பிரச்சினைக்கான அடிப்படைகள் உயிர்ப்புடன் உள்ளவரை இதுபோன்ற எத்தகைய முயற்சிகளும் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது என்பதே யதார்த்தம்.
இனப்பிரச்சனைக்கான அடிப்படைகளுக்கு தீர்வு காணப்படும் சூழல் ஏற்படும்போது இனங்களுக்கு இடையேயான நல்லிணக்கம் தானாகவே உருவாகும் என்பதே வரலாறு சொல்லும் பாடம்.